முகப்பு
சோம்பலை துடைத்தெழு!
அகரம் அமுதா
பொன்பெறும் பொழுதினை போக்குகிறாய் - மனம்
பொறுப்பிலா தனத்தினைத் தேக்குகிறாய்!
உன்பலம் அறியா துறங்குகிறாய் - மதி
ஓம்விட ஏனோ தயங்குகிறாய்
குருதியை வியர்வாய் சிந்தாமல் - வியர்
குளத்தினை குருதியாய் கருதுகிறாய்
சிறுதுயர் வரினும் சோர்ந்திடுவாய் - அது
சிறுமை என்பதை மறந்திடுவாய்
மண்ணை முட்டா சிறுவிதையும் - தளிர்
வளர்த்தே மரமாய் வருவதில்லை
சிந்தை செய்யா சிறுமதியால் - சிறு
துரும்பைப் பெயர்க்கவும் முடிவதில்லை!
முடவனும் முயன்றால் மலைதுரும்பு – நகர்ந்(து)
உருக(ல்)லை சிதைத்திடும் சிற்றெரும்பு
கடவுளும் உதவார் மலைத்தவர்க்கு - இதை
கருத்திடு! சோம்பல் குணமொதுங்கு!
ஒட்டும் மண்தான் ஒட்டுமெனும் - ஒரு
ஓட்டைப் பழமொழி சொல்லாதே!
முற்றும் அதையே நம்பாதே – பி(ன்)னம்
முதுமையில் துடித்தே வெம்பாதே!
காலம் என்பது உயிராகும் - அது
விழுந்தால் முளைக்கா மயிராகும்
மூலை எள்ளவர்க் குலகாகும் - இதை
முற்றும் உணர்ந்தால் உயர்வாகும்!
கவிதை: அகரம் அமுதா